Home நாடு விலை போய்விட்டேன் என்று நிரூபிக்க இயலுமா? ஹாடி அவாங்குக்கு சாரி கேள்வி

விலை போய்விட்டேன் என்று நிரூபிக்க இயலுமா? ஹாடி அவாங்குக்கு சாரி கேள்வி

650
0
SHARE
Ad

Saari Sunguib Selangor State Assemblyman PASஉலு கிளாங், செப். 22 – பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசாவை ஆதரிக்கும் பொருட்டு தன்னை அக்கட்சி விலைக்கு வாங்கிவிட்டதாக கூறியதை நிரூபிக்க ஆதாரங்கள் உள்ளனவா? என பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங்குக்கு உலு கிளாங் சட்டமன்ற உறுப்பினர் சாரி சுங்கிப் (படம்) சவால் விடுத்துள்ளார்.

அண்மையில் பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரை பிகேஆர் விலைக்கு வாங்கிவிட்டதாக ஹாடி அவாங் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சாரி சுங்கிப், டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமால் சிலாங்கூர் மாநிலத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே டத்தோஸ்ரீ வான் அசிசாவை ஆதரிக்கும் முடிவை தாம் எடுத்ததாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“தமக்கு பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறிய காலிட்,  பின்னர் ஆட்சிக் குழு உறுப்பினர்களை வரிசையாக நீக்கத் தொடங்கினார். ஆனால் தன்னை ஆதரிக்கிறார்களா? என்று எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் அவர் கேட்கவில்லை. எனவே காலிட்டை நிராகரிப்பது தான் நோக்கம்” என்றும் சாரி தெரிவித்தார்.

“எனினும் சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு ஒரு வேட்பாளரை ஆதரிக்க வேண்டியது  அவசியம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர். எனவேதான் வான் அசிசாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். மேலும் பிகேஆர் மற்றும் ஐசெக ஆகிய இரு கட்சிகளும் அவரை மந்திரி பெசார் பதவிக்கு முன்நிறுத்த ஆதரவு தெரிவித்துள்ளன,” என்றார் சாரி.

சிலாங்கூர் மீதான பக்காத்தானின் பிடியை வலுவாக்க உதவியதே தாம் செய்துள்ள
ஒரே தவறு என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பான முழு பின்னணியையும் தெரிந்து கொள்ளாமல் தன்னை பாஸ் கட்சி உறுப்பினர்கள் விமர்சிக்கவும் அவமானப்படுத்தவும் அக்கட்சித் தலைமை அனுமதித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

“அக்கட்சியில் நிறைய இஸ்லாமிய அறிஞர்கள் உள்ளனர். அப்படி இருந்தும் எனது
செயல்களுக்காக கண்டனத் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இது
விசாரணைக்கு முன்பே தண்டனை போல் ஆகிறது. அப்படியெனில் இது என்ன வகையான
இஸ்லாமிய கட்சி?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“முக்தாமர் கூட்டத்தில், ஒரு உறுப்பினர் எனக்கெதிராக கடவுளிடம் வேண்டிக்  கொண்ட போது, கட்சியின் நிரந்தரத் தலைவர் தலையிடவில்லை. இது கட்சிக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானம்,” என்றார் சாரி சுங்கிப்.

உலு கிளாங் உறுப்பினர் சாரி சுங்கிப் மற்றும் மோரிப் உறுப்பினர் ஹஸனால் பஹாருடீன் ஆகிய இரு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும்  வான் அசிசா மந்திரி பெசாராக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற பாஸ் கட்சியின் 60ஆவது
முக்தாமர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.