Home நாடு எம்எச் 370 விமானி தற்கொலையா? ஊடகத்துக்கு அனிஃபா அமான் கண்டனம்!

எம்எச் 370 விமானி தற்கொலையா? ஊடகத்துக்கு அனிஃபா அமான் கண்டனம்!

574
0
SHARE
Ad

Capt Zaharie MH 370 Pilot கோலாலம்பூர், செப்டம்பர். 22 – மாயமான எம்எச் 370 விமானம் குறித்து பிரபல ஹஃபிங்டன் போஸ்ட் ஊடகத்தின்  இங்கிலாந்து பதிப்பில் வெளியான கட்டுரைக்கு வெளியுறவு விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ  அனிஃபா அமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அக்கட்டுரையில் எம்எச் 370 தலைமை விமானி கேப்டன் சஹாரியா தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதே கூற்றை குறிப்பிட்டு கிவி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் இவான்  வில்சன் வெளியிட்டுள்ள புத்தகத்தை மேற்கோள் காட்டி இக்கட்டுரை வெளியாகி உள்ளது.

#TamilSchoolmychoice

நியூசிலாந்து பத்திரிகையாளர் ஜெஃப் டைலர் என்பவருடன் இணைந்து, கடந்த 4 மாதங்களாக ஆய்வு செய்து, இவான் வில்சன் எழுதியுள்ள ‘குட்நைட் மலேசியன் 370’ (Goodnight Malaysian 370) என்ற புத்தகத்தில், எம்எச் 370 விமானி சஹாரியா, அந்த விமானத்தை இயக்கும்போது கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்மைக் காலத்தில் நிகழ்ந்த வேறு 5 விமான விபத்துக்களுக்கும் இத்தகைய தற்கொலை எண்ணமே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் அந்த
புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றுகளின் அடிப்படையில் ஹஃபிங்டன் போஸ்ட் செய்திக் கட்டுரையை  வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வெளியுறவு விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அமான் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஹஃபிங்டன் போஸ்ட் போன்ற ஊடகம், நிரூபிக்கப்படாத கூற்றுகளின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார்.

எம்எச் 370 விமானி சஹாரியாவின் மனநிலை குறித்த தகவல் அடிப்படையற்றது என்றும் இத்தகைய தகவல்கள் பேரிடரில் பலியானோரின் குடும்பத்தாருக்கு மிகுந்த வேதனையையும் மன உளைச்சலையும் மட்டுமே தரும் என்றார் அவர்.

பலியானோரின் குடும்பத்தாரது உணர்வுகள் குறித்து கவலைப்படாமல் இத்தகைய  கட்டுரையை ஹஃபிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் அனிபா அமான் மேலும் தெரிவித்துள்ளார்.