பெய்ஜிங், செப்டம்பர் 23 – இந்திய எல்லையில் சீன இராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், சீன இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜிங்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இந்திய எல்லையில் நடைபெறும் சீன இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ஜிங்பிங்கிடம் மோடி தனது கவலையை தெரிவித்தார். இதற்கு அரசியல் ரீதியாக சுமூக தீர்வு காணவேண்டும் என்பதையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் சீன ராணுவத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள், இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்து தங்கினர்.
ஜிங்பிங் இந்தியா வந்த நிலையில் இந்த அத்துமீறல் நடந்ததால் இந்தியப் பிரதமர் மோடி உடனடியாக இது குறித்து ஜிங்பிங்கின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அவரும் சீன வீரர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும் படி தங்கள் நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். எனினும், சீன இராணுவ அதிகாரிகள் அதிபரின் உத்தரவை மீறி தனது வீரர்களை இந்திய எல்லைகளில் இருக்கச் செய்தனர்.
தற்போது இந்த நிகழ்வு சீனாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் கூட்டத்தை நேற்று முன்தினம் கூட்டி முக்கிய ஆலோசனைகளை அதிபர் ஜிங்பிங் நடத்தி உள்ளார்.
மேலும் அந்த கூட்டத்தின் போது, தனது உத்தரவுகளை மதிக்காத இராணுவ அதிகாரிகளை அவர் அதிரடியாக மாற்றி உள்ளதாக சீன இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.