ஷா ஆலாம், செப்டம்பர் 24 – எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய மந்திரி பெசார் அஸ்மின் அலி தலைமையில் மாநில ஆட்சிக் குழு பதவியேற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்திய சமுதாயத்தின் சார்பில் பிகேஆர் கட்சியின் சார்பில் மீண்டும் சேவியர் ஜெயகுமார் (படம்) இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான சேவியர் ஜெயகுமார், கடந்த ஆட்சிக் குழுவில் ஐந்தாண்டு காலம் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிம் தலைமையின் கீழ் பணியாற்றி, சிறந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமுதாயத்திற்கு பாடுபட்டவர் என்ற பாராட்டைப் பெற்றவர்.
பல இந்து ஆலயங்களுக்கும், தமிழ்ப் பள்ளிகளுக்கும் நிதி உதவி கிடைக்க வழிவகுத்த ஜெயகுமார், மாநிலத்தின் பல இந்து ஆலயங்களுக்கு நிலப்பட்டா கிடைக்கவும் முறையான செயல் நடவடிக்கைகளில் இறங்கி தீர்வு கண்டார்.
அவரது செயல் நடவடிக்கைக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்வது மிட்லண்ட்ஸ் தமிழ்ப் பள்ளியில் அமைந்த மாநாட்டு மண்டபமாகும்.
புதிய மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு அரசியல் ரீதியாக நெருக்கமான உறவைக் கொண்டவர் ஜெயகுமார். நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் அஸ்மினுக்கு பக்கபலமாக நின்று ஆதரவுக் கரம் நீட்டியவர் அவர்.
இந்த காரணங்களால், அவரை மீண்டும் ஆட்சிக் குழுவில் இடம் பெறச் செய்ய அஸ்மின் முனைப்பு காட்டுவதாக பிகேஆர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பாகத்தான், நடப்பு ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த கணபதி ராவ், ஆட்சிக் குழுவில் இருந்து நீக்கப்பட்டதால், அவ்வாறு நீக்கப்பட்டவர்களை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் மீண்டும் ஆட்சிக் குழுவில் சேர்க்க சிலாங்கூர் சுல்தான் எளிதாக ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும், நீக்கப்பட்டவர்களைத் தவிர்த்து புதியவர்களை நியமிக்க சுல்தான் நெருக்குதல் அளிக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
கடந்த ஓராண்டாக, ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் கணபதி ராவின் செயல் திறன் ஜசெக தலைமைத்துவத்தையோ, சக மக்கள் கூட்டணி தலைவர்களையோ கவரும் விதத்தில் இல்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்திருக்கின்றது.
அந்த வகையில், கணபதி ராவைத் தவிர்த்து எஞ்சியுள்ள இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர்தான். ஒருவர் பிகேஆர் கட்சியின் சேவியர் ஜெயகுமார், மற்றொருவர் ஜசெகவின் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யாகரன்.
இருவரில் ஜெயகுமாருக்கு ஏற்கனவே ஆட்சிக் குழு அனுபவம் இருக்கின்றது என்ற முறையிலும், அஸ்மினும் நெருக்கமானவர் என்ற முறையிலும், அவருக்கே வாய்ப்பு கிடைக்கலாம் என கருதப்படுகின்றது.
கணபதி ராவுக்கு மீண்டும் ஆட்சிக் குழு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, இந்திய ஆட்சிக் குழு பிரதிநிதி ஜசெகவுக்குத்தான் என்று பழைய நடைமுறைப்படி இடம் ஒதுக்கப்பட்டால், புதியவர் ராஜீவ் ரிஷ்யாகரனை ஜசெக தலைமைத்துவம் முன்மொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.