வாஷிங்டன், செப்டம்பர் 25 – செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரகமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா, சீனா மற்றும் உலக நாடுகள் இந்தியாவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன.
மேலும், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, இந்தியாவின் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இஸ்ரோவிற்கு அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில், “செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மங்கள்யானை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக இந்தியா மற்றும் ஆராய்ச்சி நிலையம் இஸ்ரோவிற்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதன் மூலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு, சர்வதேச நாடுகளுடன் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறியுள்ளது.
இதேபோல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் இணைந்துள்ளது. இந்தியாவின் இஸ்ரோவை போலவே, நாசாவும் மங்கள்யானின் பயணத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது” என்று கூறியுள்ளது.
மங்கள்யான் வெற்றியை பற்றி சீனா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மங்கள்யானின் வெற்றி ஆசியாவின் பெருமை” என்று கூறியுள்ளது.