கோலாலம்பூர், அக்டோபர் 7 – நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த ஆண்டைவிட நடப்பு 2014-ம் ஆண்டில் 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளியியல் துறை ஆய்வு ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
புள்ளியியல் துறையின் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
“மலேசியாவில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 3 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, நடப்பு 2014 ஆண்டில் 2.8 சதவீதமாக குறைந்துள்ளது.”
“எனினும், தொழில்ரீதியாக தொழிலாளர்களின் பங்கேற்பில் சற்றே தொய்வு ஏற்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டில் தொழில்ரீதியாக தொழிலாளர்கள் பங்கேற்றுக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகள் 67.5 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இது 0.1 சதவீதம் குறைந்து 67.4 சதவீதமாக உள்ளது” என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டம், மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு முக்கிய காரணம் அரசு எடுத்து வரும் பொருளாதார முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், சீரிய பொருளாதார சிந்தனைகளும் தான் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் மலேசியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஏறுமுகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.