பெய்ஜிங், செப்டம்பர் 26 – ஆசிய அளவில் அசைக்க முடியாத நாடுகளான இந்தியா மற்றும் சீனா இடையே, சமீபத்தில் எல்லை மற்றும் வெளியுறவுத் துறை தொடர்பான விவகாரங்களில் சமரச முயற்சிகள் நடைபெற்றாலும், வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியிலான விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ‘இந்தியாவில் உருவாக்கப்பட்டவை’ (Make In India) என்ற உலகளாவிய பிரச்சாரத்தை நேற்று துவக்கி வைத்தார். இதன் முக்கிய நோக்கம் இந்திய பொருட்களுக்கான சந்தையை உலக அளவில் பெருக்குவதாகும்.
தற்போது அதேபோன்ற திட்டத்தை சீனாவும் தொடங்கியுள்ளது. மோடி தனது திட்டத்தை வெளியிட்ட சிலமணி நேரங்களில், சீனா அரசும் ‘சீனாவில் உருவாக்கப்பட்டவை’ (Make In China) என்ற பிரச்சாரத்தை துவங்கியது.
இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தித் திறனை பெருக்க பல்வேறு வரிச்சலுகைகளை சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இதற்கு உதவும் விதமாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப இறக்குமதிகளையும் ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
இந்த புதிய திட்டங்கள் தொடர்பான பல்வேறு கட்ட முக்கிய முடிவுகளை எடுக்க பிரதமர் லீ கெக்கியாங் தலைமையில் விரைவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.