பெங்களூரு, செப்டம்பர் 27 – சட்டத்துக்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் குற்றவாளி என பெங்களூருவில் இயங்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது போன்ற சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெறும் முதல் முதலமைச்சராக ஜெயலலிதா திகழ்கின்றார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டிக்குன்ஹா இன்று பிற்பகல் தண்டனை குறித்த தீர்ப்பை வழங்குவார்.
7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
18 வருடமாக நடைபெற்று வரும் வழக்கில், 66.65 கோடி சொத்து குவிப்பு நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பின் காரணமாக, தமிழக அரசியலில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இனி பல அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழும் என்றாலும், 2016 வரை அதிமுக ஆட்சி தொடர்வதில் எந்தவித சிக்கலும் இருக்கப் போவதில்லை.
காரணம் அந்த அளவுக்கு அதிமுக தனித்த பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்றது.
இதற்கு முன்பு இதே போன்றதொரு சூழ்நிலையில் ஜெயலலிதாவுக்கு பதிலாக முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் இந்த முறையும் தமிழக முதல்வராகப் பதவியேற்று, ஜெயலலிதாவின் ஆலோசனைகள், உத்தரவுகளுக்கேற்ப செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாக தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சென்னையின் பல பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஜெயலலிதா இல்லம் உட்பட பல தலைவர்களின் இல்லங்களுக்கும் பலத்த பாதுகாவல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
65 வயதான ஜெயலலிதா, தனது நெருங்கிய தோழி சசிகலா நடராஜனுடனும் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா உறவினர் இளவரசியுடனும் இன்று தனி சிறப்பு விமானத்தில் பெங்களூரு வந்தடைந்தார்.