சென்னை, செப்டம்பர் 28 – சட்டத்தை மதிப்பவரான ஜெயலலிதா, தற்போது ஏற்பட்டுள்ள தடைகளை தகர்த்தெறிவார் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.
கடந்த 18 வருடங்களாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீது நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா உள்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
தீர்ப்பையடுத்து உடனடியாக ஜெயலலிதா உள்ளிட்டோரை பெங்களூர் போலீஸ் காவலில் எடுத்தது. இதனால், தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாக கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“முதல்வர் ஜெயலலிதா சட்டத்தை மதிப்பவர். தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றும் இறுதி தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அதில் முதல்வர் வெற்றி பெறுவார். ஏற்கனவே தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை தூள்தூளாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா.
அதே போல் இந்த வழக்கிலும் அவர் மீண்டு வருவார் என சரத்குமார் கூறினார். இதே போல் இதர கூட்டணி கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு ஆதரவான கருத்துக்களை தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.