வெனிஸ், செப்டம்பர் 29 – பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் க்ளூனேவுக்கும் கெட்டி மேளம் கொட்டியாகிவிட்டது.
இத்தனை நாட்களாக, “நானும் ஒரு பிரம்மச்சாரி தான்,” என்று சொல்லிக் கொண்டிருந்த இந்த 53 வயது இளைஞர், பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகளுக்காப் போராடும் வழக்கறிஞர் அமல் அலாமுடின் என்ற 36 வயதுப் பெண்ணை கைபிடித்திருக்கிறார்.இத்தாலியில் உள்ள காதலர்களின் சொர்க்கப்புரி என்றழைக்கப்படும் வெனிஸ் நகரில் இவர்களின் திருமணம் சனிக்கிழமை நடந்தேறியது.
இதையடுத்து பிரபலங்களைத் துரத்தும் புகைப்படக் கலைஞர்கள் (பாப்பராசி) மற்றும் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் வெனிஸில் குவிந்துவிட்டனர்.திருமணக் காட்சிகளைப் பதிவு செய்ய அனுமதி இல்லை என்றாலும், அதன் பின்னர் வெனிஸ் நகரை ஒரு படகில் வலம் வந்த இந்த நட்சத்திர ஜோடியை நூற்றுக்கணக்கான கேமராக்கள் இடைவிடாமல் ‘கிளிக்’கிக் கொண்டே இருந்தன.
16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமாண்ட மாளிகையில் செயல்பட்டு வரும் தங்குவிடுதியில் திருமணம் நடந்தது. இதையடுத்தே ‘காதல்’ என்ற பெயர் கொண்ட படகில் இவர்களின் ‘நகர் உலா’ அரங்கேறியது.அமெரிக்காவைச் சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான ஜோர்ஜ் க்ளூனே இருமுறை அகாடெமி விருதுகளையும், 3 முறை கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றவர்.
பேட்மேன் & ராபின், அவுட் ஆஃப் சைட், த்ரீ கிங்ஸ் உள்ளிட்ட பல படங்களில் தனது பங்களிப்பின் மூலம் உலக ரசிகர்களை தன் வசமாக்கியவர் ஜோர்ஜ் க்ளூனே.