காபூல், செப்டம்பர் 30 – ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அஷ்ரப் கனி அஹ்மட்ஸாய், நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் தலைமைச் செயல் அதிகாரியாக போட்டி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவும் பதவி ஏற்றுக்கொண்டார்.
தலிபான்கள் பிடியில் இருந்து அமெரிக்க உதவியுடன் தப்பிய ஆப்கானிஸ்தான், உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக மீண்டும் தலிபான்களின் கோரப்பிடியில் சிக்கி விடுமோ என்ற அச்சம் உலக அளவில் ஏற்பட்டது.
அதிபர் வேட்பாளராக அஷ்ரப் கனியும், அப்துல்லா அப்துல்லாவும் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அங்கு தொடர் குழப்பம் நிலவி வந்தது. மக்கள் ஜனநாயக ரீதியாக வாக்களித்தும், தேர்தல் முறைகேடுகள் காரணமாக முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் தலிபான்கள் அங்கு மீண்டும் தலை தூக்கத் தொடங்கினர்.
எனினும் இம்முறை விழிப்படைந்த ஐ.நா.சபையும், அமெரிக்க அரசும், வேட்பாளர்கள் இருவரிடமும் சமரசம் ஏற்படுத்தி ஆட்சியில் சம அதிகாரம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இதன் மூலம் அஷ்ரப் கனி அதிபராகவும், அப்துல்லா அப்துல்லா தலைமைச் செயல் அதிகாரியாகவும் பதவி ஏற்றனர். இவர்களுடன் 2 துணை அதிபர்களும் பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
பதவி ஏற்றபின் அப்துல்லா அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஆப்கன் தேர்தலில் தடையை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளில் தலிபான்கள் ஈடுபட்டனர். எனினும் அவற்றைக் கடந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.
ஒற்றுமையான அரசை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்களது உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்காக தேசிய ஒற்றுமை குழு உருவாக்கப்பட உள்ளது” என்று கூறியுள்ளார்.