காபூல், ஜூலை 9 – ஆப்கன் அதிபருக்கான இரண்டாம் சுற்றுத் தேர்தலின் முதல் கட்ட நிலவரப்படி, அஷ்ரப் கானி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி ஆப்கனில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா, உலக வங்கி முன்னாள் பொருளாதார நிபுணர் அஷ்ரப் கானி உட்பட 8 பேர் போட்டியிட்டனர்.
அவர்களில் யாருக்கும் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காததால், கடந்த மாதம் 14-ஆம் தேதி மீண்டும் மறு வாக்கு பதிவு நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக கானி, அப்துல்லாவை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்ததாகவும், முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில், அவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர் 56.4 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளதாகவும், இவரை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லாவுக்கு 43.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனால் இந்த முடிவை அப்துல்லா அப்துல்லா ஏற்க மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “இந்த தேர்தலில் தொழில்நுட்ப ரீதியிலான முறைகேடுகள் நடந்துள்ளன” என்று கூறியுள்ளார். அஷ்ரப் கானி (65), நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், உலக வங்கியின் பொருளாதார நிபுணராகவும் பதவி வகித்துள்ளார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பி அவர், அதிபர் தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி நலிவடைந்துள்ள ஆப்கனை வளமான நாடாக மாற்றுவதே தனது கனவு என்று அவர் உறுதி கூறியுள்ளார்.