வாஷிங்டன், செப்டம்பர் 30 – ஐஎஸ் தீவிரவாதிகளின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்து விட்டோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். சிபிஎஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“ஈராக், சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியை குறைத்து மதிப்பிட்டு அமெரிக்கா தவறு செய்து விட்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், ஈராக் ராணுவத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்து விட்டோம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க தற்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் இடையேயான மோதலை தடுக்க அரசியல் ரீதியிலான அணுகுமுறை அவசியமாகிறது.
ஈராக், சிரியா ஆகிய இரு நாடுகளுக்குமே இந்த கருத்து பொருந்தும். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இதற்காக 50 நாடுகளின் கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வந்தாலும் ஐஎஸ் அமைப்புக்கு வெளியில் இருந்து வரும் நிதி ஆதாரத்தை முடக்க வேண்டும்.
அதேபோல வெளியில் இருந்து கிடைக்கும் ஆயுதம், வெளிநாடுகளில் இருந்து வந்து ஐஎஸ்ஐஎஸ்சில் சேரும் நபர்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பகுதியின் அளவு சுருங்கி விடும். உலக வரலாற்றிலேயே அமெரிக்க ராணுவம் மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
உலகில் எந்த நாடுகளில் தீவிரவாதிகளால் பிரச்சனை ஏற்பட்டால், அந்த நாடுகள் முதலில் அணுகுவது அமெரிக்காவை தான். ரஷ்யாவையோ, சீனாவையோ அந்த நாடுகள் அணுகுவதில்லை என ஒபாமா கூறியுள்ளார்.