தனக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன், 66 வயதான ஜெயலலிதா, தனது வழக்கறிஞர்களைக் கொண்டு உடனடியாக பிணை மனுவையும், தண்டனை மீதான மேல் முறையீட்டையும் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால், இன்று அவரது மேல் முறையீடுகள் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் வாதாட வழக்கறிஞர் இதுவரை நியமிக்கப்படவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோரும் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறையீடுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
மூன்றாண்டுகளுக்கும் கூடுதலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், உயர் நீதிமன்றம் மட்டுமே சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு பிணையை வழங்க முடியும் என்ற காரணத்தால், ஜெயலலிதா பிணையில் விடுதலையாக உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சட்டப்படி தன் மீது விதிக்கப்பட்ட தண்டனைகளை செயல்படுத்த ஜெயலலிதா தடைகளைப் பெற முடியும். அதோடு, மேல் முறையீட்டு மூலம், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புகளை சட்டப்படி எதிர்கொண்டு குறைக்கவும், ரத்து செய்யவும் கூட ஜெயலலிதாவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆனால், முதல் கட்டமாக, அவர் பிணை மனுவில் வெற்றி பெற்று விடுதலையாக வேண்டும்.
தற்போது பெங்களூரு சிறைச்சாலையில் இருந்து வரும் ஜெயலலிதா, இறுதி வரையில் தன் மீதான தண்டனையை ரத்து செய்ய முடியவில்லை என்றால், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதோடு, அடுத்த பத்தாண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாத சூழ்நிலையும் ஏற்படும்.