Home நாடு முன்னாள் மந்திரி பெசாரின் ஒப்பந்தங்கள் மறு ஆய்வு – அன்வார் வலியுறுத்து

முன்னாள் மந்திரி பெசாரின் ஒப்பந்தங்கள் மறு ஆய்வு – அன்வார் வலியுறுத்து

694
0
SHARE
Ad

Khalid Ibrahim Ex MB Selangorஷா ஆலம், செப்டம்பர் 30 – சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அஸ்மின் அலி பிகேஆர் கட்சியில் இருந்த போது முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமின் (படம்)  பரம அரசியல் எதிரியாக இருந்தவர்.

காலிட்டும், அஸ்மின் அலிக்கு எதிராக பல அரசியல் முடிவுகளை எடுத்தவர். உச்சகட்டமாக பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் அஸ்மின் அலியை எதிர்த்துப் போட்டியிட்டவர்.

இவர்களின் அரசியல் பகை காரணமாக, காலிட் இப்ராகிம் தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட முடிவுகள், ஒப்பந்தங்கள் மீண்டும் மறு பரிசீலனை செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமின் முடிவுகளை அம்பலப்படுத்துவது தொடர்பாக தாம் எந்தவொரு கட்டளையும் அஸ்மினுக்குப் பிறப்பிக்கவில்லை என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

எனினும் மந்திரி பெசாராக இருந்த வேளையில், சந்தேகங்களை எழுப்பக்கூடிய சில ஒப்பந்தங்களை காலிட் மேற்கொண்டதாக அவர் கூறினார்.

Anwar Ibrahimசில ஒப்பந்தங்களை துரிதப்படுத்திய காலிட் சிலவற்றை மறைமுகமாக மேற்கொண்டதாகவும்  அன்வார் குற்றம்சாட்டினார்.

இத்தகைய ஒப்பந்தங்கள் குறித்து கூடுதல் விளக்கங்களைப் பெறுமாறு புதிய மந்திரி பெசார் அஸ்மின் அலியை தாம் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அன்வார், காலிட்டை அவமானப்படுத்தும் விதமாக அவர் முன்பு எடுத்த முடிவுகள் குறித்து தாம் விசாரிக்கச் சொல்லவில்லை என்றார்.

சிலாங்கூர் குடிநீர் வினியோகம் தொடர்பில் புத்ரா ஜெயாவுடன் காலிட் செய்து கொண்ட ஒப்பந்தம், கின்ராரா – டாமன்சாரா விரைவு நெடுஞ்சாலை திட்டம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு ஆகியவை குறித்து புதிய மந்திரி பெசார் ஆராய வேண்டும் என்றார் அன்வார்.

“புதிய அரசு நிர்வாகம் கவனிக்க வேண்டிய சில விவகாரங்கள் உள்ளன. நான் விளக்கமும், விவரமும் மட்டுமே கேட்டுள்ளேன். ஏனெனில் மேற்குறிப்பிட்ட திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை,” என்று திங்கட்கிழமை ஷா ஆலமில் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் கூறினார்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பினாங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், காலிட் மந்திரி பெசாராக இருந்தபோது செயல்படுத்திய ஒப்பந்தங்கள் வழி ஆதாயமடைந்தவர்களை அம்பலப்படுத்தப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

ஆதாயமடைந்தவர்கள் பிகேஆர் அல்லது பக்காத்தானின் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதுபற்றி கவலையில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.