இஸ்லாமாபாத், அக்டோபர் 1 – பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது பயங்கரவாதம், கொலை தொடர்பான புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்நாட்டு மாவட்ட நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் ஷெரீப், அவரது சகோதரர், மத்திய அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது பயங்கரவாதம், கொலை தொடர்பான மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் தாஹிருல் காத்ரி அளித்த புகாரின் அடிப்படையில் ஷெரீப் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதே விவகாரத்தில் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தான் தெஹ்ரிக் ஏ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் புகார் அளித்தார். ஆனால் இதனை போலீசார் ஏற்கவில்லை.
இதை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிடும்படி மாவட்ட நீதிமன்றத்தில் இம்ரான் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து மாவட்ட நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் புதிய வழக்கு ஒன்றை போலீசாரும் பதிவு செய்தனர். ஷெரீப்பின் சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப், மத்திய உள்துறை அமைச்சர் நிஸார் அலிகான்,
மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை, கொலை முயற்சி, பயங்கரவாதம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.