Home நாடு கர்ப்பால் சிங் உறவினரான சட்ட மாணவன் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது

கர்ப்பால் சிங் உறவினரான சட்ட மாணவன் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் கைது

617
0
SHARE
Ad

Dalbinder-Singh-கோலாலம்பூர், அக்டோபர் 3 – தேச நிந்தனைச் சட்டம் காலத்துக்கு ஒவ்வாதது என்ற கண்டனக் குரல்கள் எங்கும் எழுந்து, பரவலான போராட்டங்கள் முளைத்து வரும் வேளையில், இந்த சட்டத்தின் கீழ் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

இது போன்ற சட்டங்களை எதிர்த்து தன் வாழ் நாள் காலம் முழுக்கப் போராடிய காலஞ்சென்ற ஐசெக தலைவர் கர்ப்பால் சிங்கின் உறவினரான தல்பிந்தர் சிங் என்ற சட்டக் கல்லூரி மாணவர் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான இவர் தற்போது இங்கிலாந்து சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு மேற்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசமைப்புக்கு எதிராக இவர் நட்பு ஊடக வலைத் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சில பதிவுகளைச் செய்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காவல் துறை தலைமையகமான புக்கிட் அமானின் இணையத் தள குற்றப் பிரிவைச் (சைபர் கிரைம்) சேர்ந்த இரு காவல் துறை அதிகாரிகள் பினாங்கிலுள்ள தல்பிந்தரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். எனினும் அச்சமயம் அவர் வீட்டில் இல்லை.

இது குறித்து பின்னர் தகவல் அறிந்த தல்பிந்தர், பினாங்கு, ஜாலான் பட்டாணி காவல் நிலையத்தில் அதே இரவில் தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார்.

கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய அந்தப் பதிவுகளை அவர் தனது நட்பு ஊடக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை இரவு காவல் துறையினர் தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும், இக்குற்றச்சாட்டு தொடர்பில் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும் என்று காவல் துறையினர் தம்மிடம் கூறியதாகவும் தல்பிந்தர் தெரிவித்தார்.

தல்பிந்தர் சிங்கின் உறவினரான, காலஞ்சென்ற கர்ப்பால் சிங் மீதும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு,  பின்னர் 4 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கின் மேல்முறையீடு வெளிவருவதற்கு முன்பே கர்ப்பால் காலமானார்.