புதுடெல்லி, அக்டோபர் 3 – ஜெயலலிதாவிற்கு நீதி கோரி டெல்லியில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு நீதி கோரி டெல்லியில் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலையின் முன் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 10 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
இன்று மாலை 5 மணிவரையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் பேசுகையில், “ஜாமீன் மனு மீதான விசாரணையை தாமதப்படுத்துவது ஏன்?. சட்டத்தின்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு உடனடி நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
எங்களது தலைவருக்கு ஜாமீன் கொடுக்க காலதாமதம் செய்யப்படுவதில் நாட்டின் கவனத்தை திருப்பவே உண்ணாவிரதத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.