2020ஆம் ஆண்டுக்கும் அப்பால் இந்திய சமுதாயம் எவ்வாறு முன்னேற முடியும் என்பதையும் இந்த செயல் வரைவுத் திட்டம் அடையாளம் காட்டும்.
இதன் தொடர்பில் “2020க்கு அப்பால் இந்திய சமுதாய பொருளாதாரத்தின் உருமாற்றம் – வளர்ச்சியும் ஒன்றிணைந்து செயல்படுதலும்” (National Conference on Growth and Inclusiveness – Transformation of Malaysian Indian Economy Beyond 2020) என்ற தலைப்பிலான தேசிய மாநாடு ஒன்றை மலாயாப் பல்கலைக் கழகமும், பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
பிரதமர் துறை அமைச்சர் திறந்து வைப்பார்
இந்திய சமுதாயத்தின் இன்றைய சமூக, பொருளாதார நிலைமையை மதிப்பீடு செய்வதும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ன என்பதை இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களைக் கொண்டு எடுத்துக் கூற வைப்பதும், இந்த மாநாட்டின் நோக்கங்களாகும் என இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மொ.மனோகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் தங்களின் வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வதற்கான வியூகங்களையும் இந்த மாநாடு ஆராயும்.
இந்த மாநாட்டின் வழி, உருவாகும் வரைவு செயல் நடவடிக்கைத் திட்டம் 11வது மலேசியத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும்.
ஏறத்தாழ 250 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் துறையின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு, நிதி அமைச்சு, அனைத்துலக வர்த்தக, தொழிலியல் அமைச்சு, கசானா நேஷனல் எனப்படும் தேசிய முதலீட்டு வாரியம் ஆகிய அமைப்புக்களில் இருந்தும், தனியார் துறைகளின் தொழில் நிபுணர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவர்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், கோப்பியோ எனப்படும் இந்திய வம்சாவளியினரின் அனைத்துலக அமைப்பின் மலேசியப் பிரிவு, மைநாடி அறக்கட்டளை, யாயாசான் அபாடி, இஸ்கந்தார் இன்வெஸ்ட்மெண்ட் பெர்ஹாட், இந்தியத் தூதரகம் போன்ற அமைப்புகளும் இந்த மாநாட்டுக்கு, ஆதரவுக் கரம் நீட்டும் மற்ற அமைப்புகளாக இணைந்துள்ளன.