வாஷிங்டன் அக்டோபர் 4 – தென் சீனக் கடலில் சீன அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதை தடுக்க வியட்நாமிற்கு 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு.
கடந்த 1975-ம் ஆண்டு வியட்நாம் போர் முடிவிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் கம்யூனிஸ ஆட்சி மலர்ந்தது. அதன் காரணமாக அமெரிக்கா வியட்நாமிற்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தயது. வியட்நாம் போர் முடிவடைந்து 20 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் இரு நாடுகளின் உறவுகளும் சகஜ நிலைமைக்குத் திரும்பியுள்ளன.
ஆசிய நாடுகளுடன் நட்பு பாராட்டி வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, வியட்நாமுடனான உறவினை புதுப்பிக்க முயன்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை சந்தித்த வியட்நாம் துணைப் பிரதமர் பாம் பின் மின் ஆயுத ஏற்றுமதி தொடர்பாக பேச்சுவார்த்தைக் நடத்தினார்.
இந்த சந்திப்பின் விளைவாக 40 ஆண்டுகாலமாக இருந்து வரும் ஆயுத ஏற்றுமதித் தடைகளின் ஒரு பகுதியை நீக்குவதாக கெர்ரி அறிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு ஆயுதங்களையும் பரிமாற்றம் செய்துகொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வியட்னாமின் பாதுகாப்பின் மீது அமெரிக்கா திடீர் கவனத்தை செலுத்தியதற்கு முக்கியக் காரணம் சீனா. தென் சீனக் கடலில் சீன அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதை தடுக்கவே வியட்நாமிற்கு, ஆயுத ஏற்றுமதியை அமெரிக்கா தொடங்கி உள்ளது என்று கூறப்படுகின்றது.