சென்னை, அக்டோபர் 4 – அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி வருகின்றனர்.
சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத், தீபாவளி என வரிசையாக பண்டிகைகள் வரும் இந்த நேரத்தில், நடைபெறும் போராட்டங்களால் பொதுமக்களும் வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
நாளொன்றுக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக வணிகர் சங்கங்கள் தெரிவிக்கின்றன என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, “சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளிலும் தமிழகத்துக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது”.
“தமிழ்நாட்டில் நீதிக்காக எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் நீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை இப்போதுதான் அரங்கேறுகிறது” என கூறினார்.