பெங்களூரு, அக்டோபர் 7 – இன்று நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு மீதான பிணை மனு விசாரணை தற்போது இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சார்பிலான ஒரு மணி நேர வாதத் தொகுப்பை ராம் ஜெத்மலானி சமர்ப்பித்து முடித்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதாவை பிணையில் விடுதலை செய்யக் கூடாது என பவானி சிங் எதிர்ப்பு தெரிவித்து தனது வாதத் தொகுப்பை சமர்ப்பித்தார்.
தமிழகத்தின் மிக சக்தி வாய்ந்த தலைவராக இருப்பதால், ஜெயலலிதா இந்த வழக்கு குறித்த சாட்சியங்களைக் கலைத்துவிட வாய்ப்பிருப்பதாகக் கூறி பவானி சிங் பிணை விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அதன் பின்னர், சசிகலா பிணை மனு மீதான வாதங்களை அவரது வழக்கறிஞர் அமித் தேசாய் சமர்ப்பித்திருக்கின்றார்.
தொடர்ந்து மற்றொரு குற்றவாளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் இளவரசிக்கான பிணை தொடர்பான விசாரணையும் முடிவுற்ற நிலையில், சுதாகரன் மீதான பிணை மனு விசாரணை மட்டுமே எஞ்சி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடும் போது, சுதாகரன் மீதான பிணை மனு விசாரிக்கப்படும் என்றும் அது முடிந்த பின்னரே நீதிபதி தனது தீர்ப்பை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.