சென்னை, அக்டோபர் 7 – பல வகையான காணொளி விளையாட்டுக்களை – வீடியோ கேம்ஸ் – என்ற பெயரில் உருவாக்கி பயனர்களை ஈர்ப்பது ஒரு முக்கியமான வர்த்தகமாக உருவெடுத்துள்ளது.
அந்த வகையில் முக்கியமான ஆங்கிலப் படங்கள் உருவாகும்போது, அதனை அடிப்படையாகக் கொண்டு இத்தகைய காணொளி விளையாட்டுகள் உருவாக்கப்பட்டு பயனர்களின் மத்தியில் உலாவ விடுவது வழக்கம்.
அந்த வகையில் விரைவில் வெளியிடப்படவுள்ள “கத்தி” பட வெளியீட்டிற்கு முன்பாக விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் அந்தப் படத்தின் ‘ஆண்ட்ராய்டு செல்பேசி கேம்’ வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கத்தி’. தீபாவளி விருந்தாக வெளியாக உள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‘3டி’யில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விளையாட்டில் விஜய்யின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. கடத்தல் கும்பலிடம் மாட்டியிருக்கும் சமந்தாவை காப்பாற்றுவதே ‘கத்தி’ கேமின் விளையாட்டு.
இதற்கு முன்பு ‘கோச்சடையான்’, ‘அஞ்சான்’ ஆகிய படங்களுக்கு ஆண்ட்ராய்டு செல்பேசி விளையாட்டுகள் வெளியிடப்பட்டது. இப்போது அந்த வரிசையில் விஜய்யின் ‘கத்தி’ படமும் இணைந்துள்ளது.