ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது உத்தரவில் கூறியதாவது:-
“1991-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66½ கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு சென்னை தனிநீதிமன்றத்தில் நடைபெற்றது”.
“இந்த வழக்கில் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டன.ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.”
“இதில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பெங்களூர் தனிநீதிமன்றம் . இவர்கள் 4 பேர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.”
“இதில் முதல் குற்றவாளி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதிட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதத்தை முன்வைத்தார் வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி.”
“பெங்களூர் தனிநீதிமன்றம் 6 முக்கியமான அம்சங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உரிய முறையில் விசாரணை நடத்தி சரியான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்க போதிய காரணம் இல்லை.
“ஊழல் என்பது மனித உரிமையை மீறிய செயல் ஆகும். இது சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவதற்கான சூழலே எழவில்லை. இதே போன்ற ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவுக்கு உயர்நீதிமன்ற ஜாமீன் வழங்கவில்லை. 10 மாதங்களுக்கு பிறகே உச்சநீதிமன்ற அவருக்கு ஜாமீன் வழங்கியது.”
“குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கலாம் என்று அரசு விரும்பினாலும், மேற்குறிப்பிட்ட விஷயங்களையும், ஊழலின் தீவிரத்தையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, பெங்களூர் தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், ஜாமீன் மனுவையும் இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என நீதிபதி சந்திரசேகர் தீர்ப்பளித்தார்.