வாஷிங்டன், அக்டோபர் 8 – அமெரிக்காவை அதிரவைத்த அல் கொய்தா இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லாடனின் உடல், 300 பவுண்ட் இரும்புச் சங்கிலியுடன் கூடிய பையில் வைக்கப்பட்டு நடுக்கடலில் வீசப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை(CIA)-ன் முன்னாள் இயக்குனர் லியோன் பனெட்டா, தான் எழுதி ‘வொர்தி ஃபைட்ஸ்: எ மெமோய்ர் ஆப் லீடர்ஷிப் இன் வார் அன்ட் பீஸ்’ (Worthy Fights: A Memoir of Leadership in War and Peace) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
“கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி, அமெரிக்க சிறப்பு இராணுவப் படை அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லாடனை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பின்லாடன் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாம் முறைப்படி அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.”
“அதனால் அவரது உடல் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு, அரபிய மொழியில் இறுதிப் பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர், அது ஒரு கருப்பு நிறப் பையில், 300 பவுண்ட் எடையுள்ள இரும்பு சங்கிலியுடன் சேர்த்து வைக்கப்பட்டு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.