கோலாலம்பூர், அக்டோபர் 8 – பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான அனைத்து இறுதிக்கட்ட பணப்பரிவர்த்தனைகளும் முற்று பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
சுமார் 21.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் வாங்குவதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
எனினும், இறுதிக் கட்ட பணப்பரிவர்த்தனைகள், ஒழுங்கு முறைகள் மற்றும் ஒப்பந்தங்கள் முடிக்கப்படாத நிலையில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதற்கான அனைத்து பணிகளும் முற்று பெற்றுவிட்டதாக பேஸ்புக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த கைபற்றுதலின் மூலம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜேன் கோம் திங்கட்கிழமை காலையில் பேஸ்புக் நிர்வாக குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் என பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இருந்தாலும், வாட்ஸ்அப் உடனான பேஸ்புக்கின் இந்த ஒப்பந்தம் விலை உயர்ந்ததாகவும், தொழில்நுட்ப உலகில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.
வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் அதிக அளவில் பயனர்கள் உள்ளனர்.
தற்போது வரை வாட்ஸ்அப் பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.