புத்ரா ஜெயா, அக்டோபர் 12 – ரோன் 95 ரக பெட்ரோல், டீசல், பழங்கள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு பொருள் சேவை வரியில் (GST) இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரொட்டி, புத்தகங்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை வரவு செலவு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அறிவித்தார்.
300 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கும் பொருள் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 70 விழுக்காடு மலேசியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தற்போது நுகர்வோர் விலைக் குறியீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள 944 பொருட்களில் ஏறத்தாழ 56 விழுக்காடு, அதாவது 532 பொருட்களின் விலை 4.1 விழுக்காடு அளவிற்கு குறையும். அதே சமயம் 354 பொருட்களின் விலை அதிகபட்சமாக 5.8 விழுக்காடு அளவிற்கு உயரக்கூடும். வணிகர்கள் பொருட்களின் விலையை பொருத்தமற்ற வகையில், மிக அதிக அளவில் உயர்த்தி பொது மக்களுக்கு சுமையை ஏற்ற மாட்டார்கள் என அரசு நம்புகிறது,”
என்றார் பிரதமர் நஜிப்.
மருந்துப் பொருட்கள், குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், துணி வகைகள், சில
வகை நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள், காலணிகள், குழந்தைகளுக்கான அணையாடை (டயாப்பர்கள்), சோப்பு, இறைச்சி, முட்டை, சமையல் எண்ணெய், அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகள் இதனால் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பத்திரிகைகள், புத்தகங்கள், காப்பித்தூள், தேயிலைத்தூள், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ஆகியவற்றுக்கும் இனி பொருள் சேவை வரி கிடையாது.
இருதயப் பிரச்சினை, நீரிழிவு, புற்றுநோய், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட 30 வகையான நோய்களுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கும் பொருள் சேவை வரி கிடையாது என பிரதமர் அறிவித்துள்ளார்.