விசாகப்பட்டினம், அக்டோபர் 12 – வங்கக் கடலில் உருவான ‘ஹுட் ஹுட்’ புயல் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் உயர் அதிகாரிகளுக்கான அவசரக் கூட்டம்
புயல் சின்னம் காரணமாக இதுவரை சுமார் 4.5 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 இலட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு குடியேற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பின்னர்
புயலாக மாறியது. இதற்கு ‘ஹுட் ஹுட்’ என பெயரிடப்பட்டது. ‘ஹுட் ஹுட்’
என்றால் அரபு மொழியில் ஹூப்போ என்ற பெயருடைய மரங்கொத்தி பறவை என்று அர்த்தமாகும்.
ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் முக்கியமான பாதிப்பு
நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் இருந்து 460 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த இப்புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கரையை நெருங்கி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி ‘ஹுட் ஹுட்’ புயல் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 30
முதல் 60 கிலோ மீட்டர் தொலைவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று
வீசும் என்றும், கடல் அலைகள் 30 அடி உயரத்திற்கு எழும்பும் என்றும்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்
அண்மைய நிலவரப்படி, புயல் தற்போது மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதுவரை புயல் இந்தப் பகுதியைக் கடக்க இருந்த பகுதிகளில் 70 இரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புயலின் சீற்றம் காரணமாக ஆந்திராவின் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி,
விசாகப்பட்டினம், விஜயநகரம், ஷ்ரீகாகுளம் ஆகிய 5 மாவட்டங்கள் பெரும்
பாதிப்புகளைச் சந்திக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து இப்பகுதிகளில் இருந்து 4.5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 392 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மீட்பு பணியில் ஈடுபட 522 நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கடற் படையின் 39 படகுகள் விசாகப்பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 15 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.