கோலாலம்பூர், அக்டோபர் 12 – குண்டர் கும்பல் எண் 21ன் தலைவனை குறி வைத்தே புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆஹ் ஹாய்’ என்று அழைக்கப்படும் 53 வயதான அந்நபர் கடந்த 20 ஆண்டுகளாக அக்கும்பலுக்கு தலைமையேற்று இருப்பதாகவும், சூதாட்டம் உட்பட பல்வேறு சட்ட விரோத தொழில்களை செய்து வருவதாகவும் தெரிகிறது.
“போதைப் பொருள் தொடர்பான குற்றாச்சாட்டுகள் உட்பட அக்குண்டர் கும்பல் தலைவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. தற்போது குண்டர் கும்பல்களுக்கு இடையேயான மோதல்களின் எதிரொலியாக ‘ஆஹ் ஹாய்’ குறி வைக்கப்பட்டுள்ளார்,” என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை 4.25 மணிக்கு தாக்குதல் நடைபெற்ற வேளையில் ‘ஆஹ் ஹாய்’ சம்பந்தப்பட்ட இரவு விடுதியில்தான் இருந்தார் என்றும், இரண்டாவது கையெறி குண்டு அவர் மீது வீசப்பட்ட போது அது வெடிக்காததால் காயமின்றி தப்பினார் என்றும் கூறப்படுகிறது.
தனது சட்ட விரோத தொழில்களுக்குப் போர்வையாக சொத்துடைமை மற்றும் உணவுப்
பொருள் இறக்குமதி ஆகியவற்றிலும் ‘ஆஹ் ஹாய்’ கால் பதித்திருப்பதாக நம்பப்படுகிறது.
‘காட் ஃபாதர்’ படங்களில் வரும் கற்பனை கதாபாத்திரமான மைக்கேல் கொர்லியோனுடன் ஆஹ் ஹாயை சிலர் ஒப்பிடுகிறார்கள்.
“சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டபோது தனது எதிர்
குழுக்களை கோபப்படுத்தும் விதமாக ‘ஆஹ் ஹாய்’ செயல்பட்டார். தனது தொழில்
எல்லைகளை விரிவுபடுத்தும்போது எதிரிகளின் எல்லைக்குள் நுழைந்தார். தற்போது தனது கடந்த கால செயல்களை அவர் துடைத்தொழிக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்தக் கடந்த கால செயல்பாடுகளே அவரை துரத்துகின்றன,” என்று விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே ‘ஆஹ் ஹாய்’ மீது தாக்குதல் நடத்தியவர் தலைமறைவாகிவிட்டதாக
நம்பப்படுகிறது. எனினும் அந்நபரை மிக விரைவில் தேடிப் பிடிப்போம் என
காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.