கோலாலம்பூர் – தென் கொரியா நாட்டைச் சேர்ந்த இருவர், நேற்று புக்கிட் பிந்தாங்கில் உள்ள பெவிலியன் வணிக வளாகத்தில், பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, தங்களது கைப்பைகளை அங்கு வைத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பையில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் குறி வைத்துள்ள பகுதிகளில் புக்கிட் பிந்தாங்கில் உள்ள வணிக வளாகமும் ஒன்று என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அறிவித்திருந்ததால், பொதுமக்கள் மத்தியில் இப்படி ஒரு வெடிகுண்டு புரளி எழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
வணிக வளாகத்தில் இருந்த இருக்கை ஒன்றின் அடியில் இரண்டு பைகள் இருப்பதை அறிந்த வணிக வளாகத்தின் பாதுகாவலர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல்துறையினரோடு, வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்து வந்து அந்தப் பையை சோதனை நடத்திய போது, அதில் வெறும் துணிகள் மட்டுமே இருந்ததாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் சைனால் சாமா தெரிவித்துள்ளார்.
அந்தப் பைகளின் உரிமையாளர்கள் அளித்தத் தகவல் தங்களுக்கு திருப்திகரமாக இருந்ததால், அவர்களிடம் அப்பைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் சைனால் தெரிவித்துள்ளார்.