கோலாலம்பூர், நவம்பர் 19 – புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் உத்தேசப் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்தப் படங்கள் கண்காணிப்பு கேமராவில் இருந்து எடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ தாஜுதின் முகமட் இசா தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற கையெறி குண்டு வீச்சு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
“சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட இவ்விரு நபர்களும் சன் வணிக வளாகத்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதியின் முன் நின்றிருந்தவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசுவது பதிவாகியுள்ளது. குண்டுகளை வீசிய பின்னர் இருவரும் அங்கு நிறுத்தப் பட்டிருந்த கருப்பு நிற புரோட்டான் பெர்டானாவில் ஏறிச் செல்வதும் தெரிய வந்துள்ளது” என முகமட் இசா குறிப்பிட்டுள்ளார்.
“மலேசிய அரச போலீஸ் படையின் தடயவியல் பிரிவினர் இந்த கேமரா காட்சிகளை வைத்து, நல்ல ஓவியரின் உதவியோடு இரு சந்தேக நபர்களின் படங்களை வரைந்து பெற்றுள்ளனர். இரு சந்தேக நபர்களும் சுமார் 40 வயதுடையவர்கள் எனக் கருதப்படுகிறது,” என்று முகமட் இசா தெரிவித்துள்ளார்.
கையெறி குண்டு வீச்சு சம்பவம் தொடர்பில் இதுவரை 25 முதல் 46 வயதுக்குட்பட்ட 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் இரு வார போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.