Home கலை உலகம் ‘இணை’ குறும்படம் மூலம் இயக்குநராகிறார் ஷாலினி பாலசுந்தரம்!

‘இணை’ குறும்படம் மூலம் இயக்குநராகிறார் ஷாலினி பாலசுந்தரம்!

779
0
SHARE
Ad

SHALINI 1

கோலாலம்பூர், நவம்பர் 19 – லிம்காக்விங் பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் டெக்னாலஜி துறையில் இளங்கலைப் படிப்பு, அஸ்ட்ரோ யுத்தமேடை ஜூனியர்ஸ் 2014 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஷாலினி பாலசுந்தரம் தற்போது ‘இணை’ என்ற குறும்படம் மூலமாக இயக்குநராகவும் உருவெடுத்திருக்கிறார்.

பல கலையுலக நிகழ்ச்சிகளில் கூடியிருக்கும் செய்தியாளர்களுக்கு நடுவே ஒரு பெண் உதட்டில் எப்போதும் புன்னகை மலர புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். பின்னொரு நாளில் அவர் தான் ஷாலினி பாலசுந்தரம் என்பது தெரியவந்தது.

#TamilSchoolmychoice

தனது 13 வயதில் இருந்து இயக்குநராக வேண்டும் என்று கனவுடன் இருந்தவருக்கு முதல் குறும்படமே மலேசியாவின் முன்னணி நட்சத்திரமான விகடகவி மகேந்திரனை முக்கியக் கதாப்பாத்திரமாக நடிக்க வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஷாலினியுடன் பேசிய செல்பேசி உரையாடல் இதோ:-

SHALINI

செல்லியல்: தொகுப்பாளராக இருந்து இயக்குநராகும் வாய்ப்பு எப்படி வந்தது?

ஷாலினி : இயக்குநராக வேண்டும் என்பது எனது சிறு வயது முதலான கனவு. 13 வயதில் இருந்து எனக்கு இந்த துறை மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒருநாள் கடை ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தற்செயலாக என் மனதில் உருவானது தான் ‘இணை’ படத்தோட கதை. இது ஒரு உண்மைச் சம்பவம்.

செல்லியல்: வெண்ணிற இரவுகளுக்கு பின்னால் மகேன் முன்னணி நடிகர் ஆகிவிட்டார். அவரை எப்படி குறும்படத்திற்கு கொண்டு வந்தீங்க?

ஷாலினி: மகேன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இந்த கதை உருவான போது, அதில் உள்ள இரண்டு முக்கியக் கதாப்பாத்திரங்களுக்கு சரியான தேர்வாக மகேனும், டெனிஸ் குமாரும் தான் எனக்கு தெரிஞ்சாங்க. இருந்தாலும் பெரிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மகேன், குறும்படத்தில் நடிப்பாரான்னு எனக்கு கேட்க தயக்கமா இருந்தது. அதனால இன்னொரு நடிகரை இந்த படத்தில் நடிக்க வச்சு படப்படிப்பைத் தொடங்கினேன். ஆனா சில தொழில்நுட்ப பிரச்சனையால நான் எடுத்த வீடியோ எல்லாம் அழிஞ்சு போச்சு. அந்த சமயத்துல தான் மகேன் இந்த கதையை கேட்டாரு. கதை அவருக்குப் பிடிச்சிருந்ததால உடனே நடிக்க சம்மதம் சொல்லிட்டாரு. டெனிஸ் வேறு ஒரு படத்துல பிசியா இருந்திட்டதுனால அவருக்குப் பதிலா மாராஸ் ரவி நடிச்சிருக்காரு. இவங்களோட மார்தினி என்ற சிறுமி நடித்திருக்கிறாள். அஸ்ட்ரோ யுத்தமேடை ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் அவளும் ஒரு போட்டியாளர். மிகத் திறமையான பொண்ணு. நான் எதிர்பார்த்த மாதிரியே மிகச் சிறப்பா நடிச்சிருக்கா.

செல்லியல்: இந்த குறும்படத்தை டி’சினிமாஸ் தயாரிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

ஷாலினி: எனது சிறு வயது முதல் எனக்கு ஒரு கார்டியனா இருந்து வருபவர் டி’சினிமாஸ் மாராஸ் ரவி. நான் பல மேடைகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருந்ததற்கு அவர் தான் காரணம். அவர் தான் எனக்கு ஊக்கம் கொடுத்து இந்த கதை உருவாக உதவி செய்தார். இந்த படத்தில் அவரும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பா நடித்திருக்கிறார்.

INAI

செல்லியல்: இந்த படம் எதைப் பற்றிய கதை?

ஷாலினி: ‘இணை’ என்றால் ஆங்கிலத்தில் ‘parallel’. அதாவது சமமான இரு துருவங்கள் என்று சொல்வார்கள். அப்படி இரு வெவ்வேறு எண்ணங்களைக் கொண்ட இருவர் இறந்த பிறகு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை எப்படி பேசப்படுகின்றது என்பது தான் கதை. 30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை திரையரங்கில் திரையிட்டுக் காட்டலாம் என்ற எண்ணம் இருக்கின்றது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றது. இந்த படம் முழுவதும் பிளாக் மேஜிக் 4கே கேமராவில் எடுக்கப்பட்டது.

இவ்வாறு ஷாலினியுடனான செல்பேசி உரையாடல் நிகழ்ந்தது. மலேசியாவில் விமலா பெருமாள் போன்ற பெண் இயக்குநர்கள் பல வெற்றிப் படங்களை படைத்து கொண்டிருக்கும் வேளையில் புதுவரவாக ஷாலினியும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. அவரது முயற்சிக்கு செல்லியல் சார்பாக வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறோம்.

– ஃபீனிக்ஸ்தாசன்