நியூயார்க், நவம்பர் 19 – உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா என ஐ.நா.சபையின் மக்கள் தொகை நிதியம் நேற்று அறிவித்துள்ளது.
10 முதல் 24 வயதிற்குட்பட்ட 35.6 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும், அதனால் உலக அளவில் இந்தியா அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “சீனா உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடகத் திகழ்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருந்தாலும், சுமார் 35.6 கோடி பேர் 10 முதல் 24 வயதிற்குட்பட்டு இருக்கின்றனர்”.
அதற்கு அடுத்தபடியாகத்தான் சீனா உள்ளது. அங்கு சுமார் 26.9 கோடி இளைஞர்கள் உள்ளனர்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே பட்டியலில், 6.7 கோடி இளைஞர்களைக் கொண்ட இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், 6.5 கோடி இளைஞர்களை கொண்ட அமெரிக்கா நான்காவது இடத்திலும், 5.9 கோடி இளைஞர்களை கொண்ட பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும்,
5.7 கோடி இளைஞர்களை கொண்ட நைஜீரியா ஆறாவது இடத்திலும், 5.1 கோடி இளைஞர்களை கொண்ட பிரேசில் ஏழாவவது இடத்திலும், 4.8 கோடி இளைஞர்களை கொண்ட வங்காளதேசம் எட்டாவது இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.