கூச்சிங், அக்.12 – புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த
ஒருவர் காணாமல் போய்விட்டதாக வெளியான தகவலை காவல்துறை திட்டவட்டமாக
மறுத்துள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 14 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இச்சம்பவத்திற்கு தீவிரவாத முகாந்திரம் இல்லை என்றும் காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.) டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கார் (படம்) கூறினார்.
“இரு குண்டர் கும்பல்களுக்கு இடையேயான மோதலே இச்சம்பவத்திற்குக் காரணம். பழி வாங்கும் நோக்கில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காணும் விதமாக விசாரணை நடந்து வருகிறது,” என்றார் காலிட் அபுபாக்கார்.
குண்டு வெடிப்புச் சம்பவத்தை அடுத்து குண்டர் கும்பல்கள் மீதான நடவடிக்கை
தீவிரமடையுமா? எனும் கேள்விக்குப் பதிலளித்த அவர், ஏற்கெனவே ‘ஓபரேசன் கந்தாஸ் காஸ்’ மூலம் குண்டர் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இனி இந்த நடவடிக்கைகள் மேலும் பெரிய அளவில் நடைபெறும் என்றார் அவர்.
நடப்பு பட்ஜெட்டில் காவல்துறைக்கு 9.1 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் காவல்துறையின் செயல்பாடு மேலும் மேன்மை அடையும் என்றார்.