இலண்டன், அக்டோபர் 12 – தாம் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நிகழ்வில் இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பங்கேற்க வேண்டும் என மலாலா யூசுப்சாய் (படம்) தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
17 வயதான மலாலா இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார். இதன்
மூலம் மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை அவருக்கு
கிடைத்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தற்போது லண்டனில் உள்ளார். கல்விப் போராளி என
வர்ணிக்கப்படும் அவர், லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே மேற்கண்ட தனது விருப்பத்தை கூறினார்.
“மிக இளம் வயதில் நோபல் பரிசு பெறுவது உண்மையில் பெருமைக்குரிய விஷயமாக
எனக்குப் படுகிறது. இப்பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சத்யார்த்தியின் பணிகள் எனக்கு தூண்டுகோலாக அமைந்தன,” என்றார் மலாலா.
ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதே தமது விருப்பம்
என்று குறிப்பிட்ட அவர், உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நிற்க வேண்டும் என்றார்.
“நான் நோபல் பரிசை பெறும் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மேலும் வலுவடைய வேண்டும். தற்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலை கவலை தருகிறது,” என்றார் மலாலா.
பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த இரு நாட்டு பிரதமர்களும் முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இனி தனது கல்வி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் மருத்துவர் ஆக வேண்டும் என விரும்பினேன். ஆனால் அரசியல்வாதியாக வர வேண்டும் எனும் ஆசை தற்போது என் மனதில் துளிர் விட்டுள்ளது,” என்று மலாலா மேலும் கூறினார்.