முல்தான், அக்டோபர் 12 – பாகிஸ்தானின் முல்தான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசல் காரணமாக 8 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆட்சியைப் பிடித்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரில் மீது தெக்ரிக் இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் குற்றம்சாட்டி உள்ளார்.
இதையடுத்து நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவர்
தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். இம்ரான் கானுக்கு பாகிஸ்தானின்
‘பாத்’ கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன்பு தன் கட்சித் தொண்டர்களுடன் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் இம்ரான் கான். தற்போது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
நேற்று முல்தான் நகரில் உள்ள திடலில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் இம்ரான் கான். கூட்டம் முடிந்த பின்னர் திடலில் கூடியிருந்த பொது மக்கள் வேகமாக முண்டியடித்து வெளியேற முற்பட்டனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 40
பேர் காயம் அடைந்தனர்.