புது டில்லி, அக்டோபர் 14 – இந்தியாவில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஆசிய நாடுகள் மட்டும் அல்லாமல் மேற்கத்திய நாடுகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் சமீபத்தில் நடந்த அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாடு, இந்திய சந்தைகள் குறித்த உலக நாடுகளின் கண்ணோட்டத்தை வெளிக்காட்டியது.
இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற சில மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடியுடன், இந்தியாவில் அதிக ,முதலீடுகளைச் நிறுவி உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் சந்தித்து பேசினர். அப்போது, இந்திய சந்தைகள் மற்றும் அரசு சார்பான சட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்திய அளவில் வர்த்தகம் செய்வது மிகக் கடினமான காரியமாக உள்ளது என குறிப்பிட்டனர்.
குறிப்பாக, இந்தியாவிற்கான ‘வோடபோன்’ தலைவரும், ஹோண்டா தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரும் இந்திய சட்ட திட்டங்களினால் முதலீடு செய்வது குறித்து ஏற்பட்டுள்ள தயக்க நிலை பற்றி விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த மோடி, அந்நாடுகளின் முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடுகளைச் செய்யுமாறும், அதற்கான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்யும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு, ‘இந்தியாவில் தயாராகும்’ (Make in India) என்னும் திட்டத்தை துவக்கினார்.
இதன் முன்னோட்டமாக சமீபத்தில் இந்தூரில் நடந்த அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் உரையாற்றியதாவது:-
“உலக நாடுகள் இந்தியாவில் சுமார் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அனுமதி கோரியுள்ளன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி நாட்டின் உற்பத்தியை உயர்த்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தியா உலகளாவிய தயாரிப்பு மையமாக மாறி வருகின்றது. எனவே அனைத்து முதலீட்டு நடவடிக்கைகளையும் முன்வைத்து இந்திய அரசு தனது அடுத்த கட்ட பணிகளைத் தொடங்கும்” என்று கூறியுள்ளார்.