வட அமெரிக்கா, அக்டோபர் 13 – அர்னால்டு சென்னை வந்துபோன மறுவாரம், தமிழக முதல்வர் – முன்னாள் முதல்வர் ஆகிவிட்டார். ஆனால், ஜெயலலிதாவைச் சந்தித்துச் சென்ற நேரம், அர்னால்டுக்குச் சுக்கிர திசை அடித்திருக்கிறது போல.
ஆறு முறை ’மிஸ்டர் ஒலிம்பியா’ என்று பாடி பில்டிங்கின் உச்சத்தைத் தொட்டவர் அர்னால்டு. அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, வட அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
1970 முதல் ’அர்னால்டு ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்’ எனும் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படுவது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடக்கும் இந்தத் திருவிழாவில், பாடி பில்டிங், ஏரோபிக் போட்டிகள் மிகவும் பிரபலம்.
கிட்டத்தட்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்படும் இந்தத் திருவிழாவில், 1,75,000 பார்வையாளர்கள் கலந்துகொள்கிறார்களாம்.
இந்தப் போட்டி நடக்கும் இடத்தில், ஏற்கெனவே அர்னால்டுக்கு குட்டி சிலை உண்டு. ஆனால், இப்போது 8 அடி உயரம் மற்றும் 600 பவுண்ட் எடை கொண்ட (273 கிலோ) வெண்கல சிலையை அமைத்துப் பெருமைப்படுத்தி இருக்கிறது ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் குழு.
இந்த சிலைத் திறப்பு விழாவில், அர்னால்டு கலந்துகொண்டு, அவரே தன்னுடைய சிலையைத் திறந்துவைத்தார். 2015 மார்ச் 5 முதல் 8 வரை நடக்க இருக்கிறது.
24-வது அர்னால்டு ஸ்போர்ட்ஸ் திருவிழாவுக்கு சென்ற ஆண்டைவிட அதிகமாக, கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது அர்னால்டு ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல் குழு. இதற்காக 42 மில்லியன் டாலர்கள் செலவிட இருக்கிறார்களாம்.