பாக்தாத், அக்டோபர் 13 – ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது நிகழ்ந்த தொடர் கார் குண்டு தாக்குதலில் சிக்கி சுமார் 38 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பாக்தாத்தின் வடக்கே உள்ள காஸிமியா பகுதியில் ஒரு கார் குண்டு வெடித்தது. இதில் 3 காவல் அதிகாரி உட்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
பின்னர், வடமேற்க்கின் சுலா என்ற பகுதியில் நடந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாக்குதலால் அப்பகுதியில் இருந்த கடைகள், ஆங்காங்கே இருந்த வாகனங்கள் ஆகியவை பெரும் சேதமடைந்தது.
மேலும், ராணுவ சோதனைச் சாவடி மீது குண்டுகள் நிரப்பிய காரை மோதச் செய்ததில் 18 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை இத்தாக்குதல் சம்பவங்களுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மேலும் படுகாயமடைந்தவர்களில் ஒரு சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.