Home நாடு பிகேஆரின் புதிய பொதுச்செயலாளராக ரபிசி நியமனம்!

பிகேஆரின் புதிய பொதுச்செயலாளராக ரபிசி நியமனம்!

728
0
SHARE
Ad

rafiziபெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 13 – டத்தோ சைஃபுடின் நாசுசன் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அக்கட்சியின் உதவித்தலைவர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, கட்சியை ஒருங்கிணைக்கும் விதமாக இந்த புதிய நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

சைஃபுடின் மற்றும் பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இசா ஆகிய இருவரும் கட்சியின் தேர்தல் பிரிவு இணை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், ரபிசி ரம்லிக்கு பதிலாக பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் டிஸ் டிசின் வியூக இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்புகளை நேற்று இரவு நடைபெற்ற கட்சியின் தலைமைத்துவ கூட்டத்தில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் அறிவித்தார்.

இதுதவிர பிகேஆர் கட்சியில் ஏற்கனவே உள்ள மூன்று உதவித்தலைவர்களோடு, மேலும் இரண்டு புதிய உதவித் தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இது குறித்து பிகேஆர் மகளிர் தலைவி சுரைடா கமாரூடின் கூறுகையில், “இரண்டு புதிய உதவித்தலைவர்களாக ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் பெனம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் டேரெல் லெய்கிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் எங்களுக்கு இருவரின் பெயர் மட்டுமே தெரியும். மற்ற விவரங்கள் இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை. விரைவில் கட்சி அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கும்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.