சான் பிரான்சிஸ்கோ, அக்டோபர் 15 – அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தின் உட்பகுதியில் உள்ள ஜன்னல் மற்றும் உட்புற சுவர் போன்ற அமைப்பை இணைக்கும் பகுதியில் லேசாக விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.
திங்கட்கிழமையன்று டல்லாஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போயிங் 757 ரகத்தைச் சேர்ந்த, ஏஏ2293 என்ற அந்த விமானம் இடையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் மொத்தம் 184 பயணிகளும் 6 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
மேலே படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள பகுதியில் விரிசல் ஏற்பட்டதும், அதிலிருந்து கனத்த சத்தம் எழுந்துள்ளது.
“விரிசல் ஏற்பட்ட போதிலும், விமானத்திற்குள் காற்றழுத்தம் குறையவில்லை என்பதாலும், பிராணவாயு கவசங்கள் தானாகவே வெளிப்படவில்லை என்பதாலும், விமானம் டல்லாஸ் நகரை நோக்கி தொடர்ந்து செல்லும் என தலைமை விமானி முதலில் அறிவித்தார். எனினும் விரிசலடைந்த பகுதியை நேரில் பார்வையிட்டதும் அவர் தனது முடிவை மாற்றி, விமானத்தை சான் பிரான்சிஸ்கோவுக்கே திருப்பினார்” என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மேட் மில்லர் தெரிவித்தார்.
இதையடுத்து பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அந்த விமானம் திங்கட்கிழமை அதிகாலை 2.15 மணிக்கு தரையிறங்கியது என்றார் அவர்.
“விமான உட்பகுதியில் விரிசல் ஏற்பட்டதும் பயணிகள் பலர் பீதியில் அலறினார். அந்தப் பகுதியில் இருந்து விசில் போன்ற பலத்த சத்தம் எழுந்தது. எனினும் விமானப் பணியாளர்கள் நாங்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவே தொடர்ந்து கூறி வந்தனர்,” என்று செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார் வில்சன் என்ற பயணி.
இவர் விமானம் பறந்து கொண்டிருந்தபோதே தனது, அதற்குள் நிகழ்ந்தவற்றை முகநூல் பக்கத்தின் வழி தொடர்ந்து இடுகையிட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.