கோலாலம்பூர், அக்டோபர் 16 – பிகேஎன்எஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில வளர்ச்சி கழகத்தின் தலைவராக அஸ்மின் அலி பதவி வகித்தபோது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்களை விசாரணை அதிகாரி திரட்டி வருவதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் டத்தோ முகமட் ஜாமிடான் அப்துல்லா அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) அலுவலகத்தில் விசாரணை அறிக்கையை அளிக்கும் வரை இந்த விசாரணை குறித்த தகவல்களை வெளியிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
சிலாங்கூரின் நடப்பு மந்திரி பெசாரான அஸ்மின் அலி மீதான புகார் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் அறிக்கை வெளியிட வேண்டும் என அரசு சார்பற்ற இயக்கம் ஒன்றைச் சேர்ந்த அப்துல் காலிட் இப்ராகிம் என்பவர் விடுத்துள்ள கோரிக்கை குறித்து மலாய் நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது.
இது குறித்து கருத்துரைத்த முகமட் ஜாமிடான், மூன்றாம் தரப்பை அணுகுவதைக் காட்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக ஊழல் தடுப்பு ஆணையத்தை அணுகி உரிய விளக்கங்கள் பெறலாம் என்றார்.