கோலாலம்பூர், அக்டோபர் 16 – ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைய இருந்த 13 பேரை மலேசியக் காவல் துறையினர் நேற்று செவ்வாய்க்கிழமை, ஷா ஆலமில் உள்ள உணவகம் ஒன்றில் கைது செய்தனர்.
கைதானவர்களில் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்கள் அடங்குவர் என்றார் காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கர்.
தற்போது பாதுகாப்பு குற்றங்கள் தொடர்பில் அவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
“துருக்கி வழியாக சிரியாவுக்கு புறப்பட இருந்த வேளையில், போலீஸ் கண்காணிப்பு காரணமாக அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிரியாவுக்கு அனுப்ப தேர்வு செய்த சில நபர்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். எனினும் விசாரணை நடந்து வருவதால் இதுகுறித்து விரிவாக விவரிக்க இயலாது” என்றும் அவர் கூறினார்.
“முகநூல் போன்ற சமூக வலைத்தள ஊடகங்கள் வழி இவர்களைக் கண்டுபிடித்தோம். அனைவருமே தங்கள் சொந்த செலவில், சுய விருப்பத்தின் பேரில் சிரியா செல்லவிருந்தனர்,” என்றார் காலிட்.
இப்படிப்பட்ட இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அணையத்திடம் காவல்துறை கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை 3 பெண்கள் உட்பட 22 மலேசியர்கள் சிரியாவில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் இணைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 23 பேர் பல்வேறு தீவிரவாத குழுக்களுடன் உள்ள தொடர்புகளின் பேரில் பிடிபட்டுள்ளனர்.
சிரியா தீவிரவாத குழுக்களில் மலேசியர்களும் இருப்பது தெரியவந்தது முதல், 5 மலேசியர்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர், 6 பேர் காயமடைந்துள்ளனர்.