கோத்தபாரு, அக்டோபர் 16 – அடக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் கிளந்தான் சட்டமன்றத்தின் பாரிசான் உறுப்பினர்கள் 27,600 ரிங்கிட் நிதி உதவி அளித்துள்ளனர்.
அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ நோசுலா மட்-டியா இத்தொகையை கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ அகமட் யாகோப்பிடம் (படம்) அளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நோசுலா, 12 பாரிசான் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த நிதியை அளித்ததாக தெரிவித்தார்.
“இது எங்களுடைய சிறிய, தனிப்பட்ட பங்களிப்பாகும். இதேபோல் பாஸ் கட்சியின் 32 சட்டமன்ற உறுப்பினர்களும் பிகேஆரின் ஒரே உறுப்பினரும் தங்களால் இயன்ற நிதியை அளிக்க வேண்டும்,” என்று நோசுலா வலியுறுத்தினார்.
இதற்கிடையே பாலஸ்தீனர்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கண்டித்து கிளந்தான் சட்டமன்றத்தில் அவசர கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.