புது டில்லி, அக்டோபர் 16 – ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ (IndiGo Airlines) நிறுவனம், ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 ஏ320 விமானங்களை வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ (IndiGo Airlines), உலக அளவில் விமான போக்குவரத்துத் துறையில் வலிமையாக காலூன்ற காத்திருக்கின்றது. அதன் முன்னோட்டமாக, அந்நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து, சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 250 ஏ320 விமானங்களை வாங்க இருக்கின்றது.
இண்டிகோ ஏர்லைன்ஸின் இந்த புதிய வர்த்தகம் உலக நிறுவனங்களை பெரிதாக ஈர்த்துள்ளது. எதிர்வரும் 2018-ம் ஆண்டு முதல், ஏர்பஸ் நிறுவனம் இண்டிகோவிற்கான விமானங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா கோஷ் கூறுகையில், “வளர்ந்து வரும் இந்திய வர்த்தகத்தை பயன்படுத்திக் கொள்ள இதுவே சரியான தருணமாகும். விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் தற்சமயம் கையெழுத்தாகி உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆறு வருடங்களில் இந்திய பயனர்களின் எண்ணிக்கை சுமார் 75 சதவீதம் அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸின் இந்த புதிய திட்டம் வரவேற்கத்தக்கது என வர்த்தக நிபுணர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.