இலண்டன், அக்டோபர் 18 – உலகப் பிரசித்தி பெற்ற மேடம் டூசாட் (Madam Tussauds) மெழுகுப் பொம்மை அருங்காட்சியகத்தில் தனது மெழுகுச் சிலை வைக்கப்படுவதால் உற்சாகத்தில் மிதக்கிறார் பிரபல இந்தி நடிகை கத்ரினா கைஃப்.
இதற்காக 20 கலைஞர்களைக் கொண்ட டூசாட் குழுவினர் அண்மையில் மும்பை வந்துள்ளனர். அங்கு கேட்ரினாவை பல்வேறு கோணங்களில் அளவெடுத்துள்ளனர்.
இதையடுத்து அவரது மெழுகுச் சிலையை தயாரிக்கும் பணி துவங்க உள்ளது. இதற்கு இந்திய மதிப்பில் மொத்தம் 1.46 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இந்த மெழுகுச் சிலை லண்டனில் உள்ள டூசாட் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்படும். கத்ரினாவின் நடன அசைவு ஒன்றையே சிலையாக வடிக்க உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பிரபலமாக உள்ள யாரை மெழுகுச் சிலையாக வடிக்கலாம் என ‘மேடம் டூசாட்’ குழுவினர் இணையம் வழி கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி கத்ரினா முதலிடம் பிடித்தார்.
மும்பை வந்த டூசாட் குழுவினரிடம் ஒரு பள்ளி மாணவி போல் உற்சாகத்துடன் பேசி மகிழ்ச்சி பொங்க சிலை உருவாக்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்தாராம் கேட்ரினா.
“எனது உருவம் மெழுகுச் சிலையாக வடிக்கப்படுவது மிகுந்த பெருமை அளிக்கிறது. அதைவிட எனக்கு இந்தப் பெருமையை தேடித் தந்துள்ள ரசிகர்களின் அன்பு நெகிழ வைக்கிறது. இந்திய திரைத்துறையின் மிகப்பெரிய ஜாம்பவான்களின் சிலைகளுடன் எனது மெழுகுச் சிலையும் டூசாட் அருங்காட்சியகத்தில் இடம்பெறுவதை என் வாழ்நாளில் அபாரமான தருணங்களில் ஒன்றாக கருதுகிறேன்” என்கிறார் கத்ரினா.
டூசாட் அருங்காட்சியகத்தில் இதற்கு முன்னர் ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், ஹிருதிக் ரோஷன், சல்மான் கான், அமிதாப் பச்சன், கரீனா கபூர் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.