கோலாலம்பூர், அக்டோபர் 17 – ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சின் மூத்த உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக அவர் ஐ,எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் இருந்து பணம் பெற்றதாகவும் காவல்துறை தலைவர் (ஐ.ஜி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கர் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள நபரும் சிரியா செல்வதற்காக அத்தொகை பெற்றதாக குறிப்பிட்ட அவர், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் மேலும் பலர் விரைவில் பிடிபடுவர் என்றார்.
“இது தொடர்பான நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக உள்ளோம். சிரியாவுக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று பொது மக்களுக்கு உறுதி அளிக்கிறோம்,” என்றார் காலிட்.
கடந்த திங்கட்கிழமை தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 14 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களில் மூவர் ஐ,எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்த்தவர்கள் என்று நம்பப்படுகிறது.
மூன்று பேரில் ஒருவர் அரசு அதிகாரி, ஒருவர் முகநூல் வழி ஐ,எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் குறித்து பரப்புரை செய்த வேலையில்லா நபர், மற்றொருவர் சிரியா போராளிக் குழுவில் இணைந்து பணியாற்றி பின்னர் நாடு திரும்பியுள்ள 34 வயது ஆடவர் என்பது குறிப்பிடத்தக்கது.