இஸ்லாமாபாத், அக்டோபர் 18 – இந்தியாவுடனான போருக்கு பாகிஸ்தான் இராணுவம் தயார் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் தொடர்பான பிரச்சனை பல வருடங்களாக இருந்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் காஷ்மீர் எல்லையில், இந்தியா-பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தங்களுக்கு இடையே தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “காஷ்மீரை மீட்க இந்தியாவுடன், பாகிஸ்தான் எந்நிலையிலும் போர் புரியத் தயார் நிலையிலேயே உள்ளது.”
“காஷ்மீருக்காகப் போர் தொடுக்க லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் உறுதியாக உள்ளனர். காஷ்மீர் மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர். அதை செய்யும் திறமையும் பாகிஸ்தானிடம் உள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் இராணுவம் குண்டுகளை வீசும்போது காஷ்மீரிலுள்ள மக்களுக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று யோசிக்க வேண்டி உள்ளது.”
“ஆனால் இந்திய இராணுவத்திற்கு அதுபோன்ற எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது அதனால் பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்படுகின்றது. இந்தியாவின் தற்போதய பிரதமர் மோடி, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர். எப்பொழுதும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளவர்”.
“அவருடனான பேச்சுவார்த்தை எப்போதும் பலன் அளிக்காது. அதனால் மற்ற நடவடிக்கைகளும் பாகிஸ்தான் தயாராகவே இருக்க வேண்டும்.”
“கடந்த காலங்களில் ஆங்கில ஆட்சியைப் பின் தொடர்ந்து சென்றது போல், தற்போது மோடியின் பின்னால் போவதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீர் பாகிஸ்தானின் தேசிய பிரச்சனை. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.