கோலாலம்பூர், அக்டோபர் 18 – கார் கண்ணாடிகளை கருமையாக்குவது தொடர்பில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
முன்னதாக புதிய விதிமுறைகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அத்துறை அறிவித்திருந்தது.
பின் இருக்கை கண்ணாடிகள் மற்றும் வாகன பின்புற கண்ணாடிக்குமான ‘புலப்படக்கூடிய ஒளி ஊடுருவும்’ அளவானது 50 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக குறைக்கப்படும் என சாலை போக்குவரத்துத் துறையின் பொது இயக்குநர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் அகமட் கடந்த மாத இறுதியில் அறிவித்தார்.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் உரிமையாளர்கள் தங்கள் காரில் உரிய மாற்றங்களைச் செய்ய ஆறு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
“அடுத்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைவருக்கும் கால அவகாசம் உள்ளது,” என்றார் இஸ்மாயில் அகமட்.
புதிய விதிமுறைகளை பின்பற்றாத வாகனமோட்டிகளுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டால் 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரு வார சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.