Home நாடு சகோதரருக்கு 77 மில்லியன் ஒப்பந்தம் – தமக்கு தொடர்பில்லை என்கிறார் ஹிஷாமுடின்

சகோதரருக்கு 77 மில்லியன் ஒப்பந்தம் – தமக்கு தொடர்பில்லை என்கிறார் ஹிஷாமுடின்

663
0
SHARE
Ad

hishamuddin-husseinகோலாலம்பூர், அக்டோபர் 18 – தனது இளைய சகோதரருக்கு 77 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மது போத்தல் முத்திரைக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ  ஹிஷாமுடின் துன் ஹூசேன் (படம்) தெரிவித்துள்ளார்.

“எனது சகோதரர் என்ன செய்கிறார் என்பது எனக்கு தெரியாது. அவர் எதில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்தும் எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. இதில் ஏதேனும் சர்ச்சை இருப்பின் அது குறித்து பதில் அளிக்க வேண்டியது அவரது பொறுப்பு,” என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஹிஷாமுடின் கூறினார்.

தமக்குத் தெரிந்த வரையில், தான் தற்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சின் வழியோ இதற்கு முன்பு பொறுப்பு வகித்த அமைச்சின் வழியோ தனது சகோதரர் எந்த வகையிலும் ஆதாயம் அடையவில்லை என்றார் அவர்.

#TamilSchoolmychoice

“இந்த விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே விட்டுவிடுகிறேன். எனது சகோதரர் தவறு செய்திருந்தால் தனிப்பட்ட வகையில் என்னிடம் இருந்து அவருக்கு எத்தகைய பாதுகாப்பும் கிடைக்காது. எனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்றது என்பதால் எனது குடும்பத்தாருக்கு ஒப்பந்தங்கள் எதையும் வழங்கக்கூடாது என்று வலியுறுத்துவதை கொள்கையாகவே வைத்துள்ளேன்,” என்றார் ஹிஷாமுடின்.

தமது சகோதரர் ஹரிஸ் ஒன் ஹூசேனுக்கு அக்குறிப்பிட்ட ஒப்பந்தத்தை அளித்தது அரச மலேசிய சுங்கத்துறை என்றும் அது தமது அமைச்சின் அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.